நீங்கள் செய்யக்கூடாத காரியம் ஒன்றை ALMA தொலைநோக்கி செய்துள்ளது – நேரடியாக சூரியனை பார்ப்பதே அது! சூரியனின் பிரகாசமான ஒளி உங்கள் கண்களை பாதிப்படையச் செய்யும்.
பலர் சூரியனை நேரடியாக நீண்ட நேரம் அவதானித்ததால் தங்களது பார்வையை இழந்துள்ளனர். ஆனால் ALMA இற்கு உண்மையான கண்கள் இல்லை, மாறாக உணர்திறன் அதிகம் கொண்ட விலைமதிப்பு மிக்க உணரிகளைக் கொண்டுள்ளது.
பிரகாசமும் வெப்பமும் கொண்ட சூரிய ஒளியால் இந்த உணரிகள் பாதிப்படையும் எனினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பாதிப்பில் இருந்து உணரிகளை பாதுகாத்துள்ளனர். அதன் பின்னரே சூரியனை நோக்கி ALMAவின் தட்டுக்களை திருப்பியுள்ளனர்.
நாம் பார்க்கும் சூரியனில் இருந்து பிரகாசிக்கும் ஒளி சூரியனது பிரகாசமான மேற்பரப்பில் இருந்து வருகிறது. ஆனால் ALMA புலப்படும் ஒளியில் இந்தப் பிரபஞ்சத்தை பார்ப்பதில்லை. மாறாக இது “ரேடியோ” அலைவீச்சில் பிரபஞ்சத்தை அவதானிக்கிறது. ALMA வின் கண்களின் ஊடாக சூரியனது மேற்பரப்பிற்கு மேலே இருக்கும் வாயு அடுக்கு ஒன்றை எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்த வாயு அடுக்கு “நிற மண்டலம்” (chromosphere) என அழைக்கப்படுகிறது.
மேலே படத்தில் இருக்கும் சூரியபுள்ளி ALMA தொலைநோக்கியின் சிறந்த அவதானிப்புகளில் ஒன்று. சூரியபுள்ளிகள் என்பது சூரியனது மேற்பரப்பில் இருக்கும் சற்றே குளிர்ச்சியான பிரதேசமாகும், இவை கருப்பு நிறத்தில் தெரியும். இந்தக் குறைந்த வெப்பநிலை அதிகூடிய காந்தப்புலத்தினால் ஏற்படுகிறது.
இந்த ALMA அவதானிப்புகள் மூலம் சூரியனது செயற்பாடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடியும் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். சூரியனைப் பற்றி பூரணமாக அறிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்று, சூரியன் தான் வெப்பத்திற்கும் ஒளிக்கும் பிரதான முதலாகும். சூரியனில்லாமல் பூமியில் உயிர்கள் ஒன்றும் இருக்காது.
ஆர்வக்குறிப்பு
டிசம்பர் 18, 2015 இல் ALMA படம்பிடித்த சூரியப்புள்ளி (மேலே படத்தில் உள்ளது) பூமியைப் போல இரு மடங்கிற்கும் பெரியது.
Share: